குறைந்த சீனியை உடைய பானங்களுக்கான விலை, அதிகமாக குறைக்கப்பட வேண்டும் – வணிகர்கள் சம்மேளனம் கோரிக்கை

ஷா ஆலம், ஜூலை 23-

விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் “குறைந்த இனிப்பு, விலை குறைவு” எனும் பரப்புரைக்கான ஆதரவை பெருக்க, குறைந்த இனிப்பை உடைய பானங்களுக்கான விலை குறைப்பை 10 காசுக்கு பதிலாக இன்னும் கூடுதலாக குறைக்க வேண்டும்.

மலேசிய முஸ்லிம் உணவக நடத்துநர்கள் சங்கம் – பிரெஸ்மாவுக்கு, அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார், மலேசிய வியாபாரிகள் மற்றும் அங்காடி கடைக்காரர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் டத்தூஸ்ரீ ரோஸ்லி சுலைமான்.

பிரெஸ்மா நிர்ணயித்துள்ள 10 காசு, அப்பரப்புரைக்கு ஆக்கப்பூர்வ பலனை அளித்திடாது. காரணம், வெறும் 10 காசை மட்டும் குறைத்தால் யாரும் அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

அதுவே, 20 அல்லது 30 காசுகள் குறைக்கப்பட்டால், அப்போதுதான் அப்பரப்புரைக்கு நல்லதொரு பலனும் ஆதரவும் கிடைக்கும்.

மேலும், குறைந்த இனிப்புக்கான பரப்புரையில், வெறும் தேநீர், காப்பி மட்டுமல்லாது இதர வகை பானங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென ரோஸ்லி ஆலோசனை விடுத்தார்.

அன்றாட உணவு முறையில், மக்கள் குறைந்த சீனியை எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்க, குறைந்த சீனி, குறைந்த விலை எனும் பரப்புரை, கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன மீதான துணையமைச்சர் புஜியா சாலே கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS