சேப்பங், ஜூலை 23-
வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்தி வரும் கலவரம் மோசமடைந்து வரும் வேளையில் தலைநகர் டாக்காவிலிருந்து இதுவரையில் 123 மலேசியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த 123 மலேசியர்களும் நேற்று மாலை 4.56 மணியளவில் சிப்பாங், KLIA- 2 ஐ வந்தடைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். டாக்காவிலிருந்து மலேசியர்களை மீட்கும் நடவடிக்கை எவ்வித சிக்கலின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து மலேசியர்களை அழைத்து வரும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சைபுடின் தெரிவித்தார்.