பகாங், ஜூலை 23-
நடந்து முடிந்த மாரான் ஸ்ரீ மரத்தண்டாவர் ஆலயத்தின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமன் பழனியப்பன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தேர்தல் ரத்தான இதர பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு EGM எனப்படும் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஆலயத்தின் துணைத் தலைவர் மருதவேல் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆலய நிர்வாகத்தின் துணைத் தலைவர், செயலாளர், துணைத் செயலாளர், பொருளாளர், துணைப்பொருளாளர் மற்றும் 19 நிர்வாக உறுப்பினர்களுகான தேர்தல், ராமன் தலைமையில் ஒரு சிறப்பு பொதுக்கூட்டத்தின் வாயிலாக நடத்தப்படும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மருதவேல் தெரிவித்தார்.
ஆலயத்தின் புதிய தலைவர் ராமன் அலுவல் பயணம் காரணமாக தற்போது அமெரிக்காவில் இருப்பதால் வரும் ஆகஸ்ட் முதல் தேதி நாடு திரும்பிய பின்னர் அவருடன் ஆலய நிர்வாகத்தின் இதர பொறுப்பாளர்கள், இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மருதவேல் குறிப்பிட்டார்.
தலைவர் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைக்கு தீர்பு காணப்படும் வரையில் ஆலயத்தின் அன்றாட நடவடிக்கைகளை முடக்கிவிட இயலாது. காரணம், இதில் ஆலய பணியாளர்களும், பக்தர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
எனவே ஆலயத்தின் அன்றாட நடவடிக்கைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல், அதன் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை தாங்கள் எல்லா நிலைகளிலும் உறுதி செய்யவிருப்பதாக மருதவேல் உறுதி கூறினார்.
இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெமர்லோ உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு தொடர்பான விளங்கங்களை ராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம் சண்முகம் விவரித்தார்.