ஜோகூர், ஜூலை 23-
ஜோகூர்,இஸ்கந்தர் புத்தேரி-யில் Eco Galleria பேரங்காடி மையத்திலிருந்து 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுரையில் ஐந்து சந்தேகப் பேர்வழிகள் பிடிபட்டுள்ளனர்.
28 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இன்று காலையில் ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.
31 வயதுடைய ஐந்தாவது சந்தேகப் பேர்வழி இன்று மாலையில் ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வரும் திங்கட்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு 7 நாள் தடுப்புக்காவம் அனுமதி பெறப்பட்டது.
ஐந்தாவது சந்தேகப்பேர்வழி, இன்று அதிகாலை 4.45 மணியளவில் சிலாங்கூர், பத்தங் காளி- யில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் பிடிபட்டார். அந்த நபர் கைது செய்யப்பட்ட ஹோட்டலில்தான் அந்த 6 வயது சிறுமியையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தனது தந்தையுடன் அந்த பேரங்காடிக்கு சென்றிருந்த ஆல்பர்டைன் லியோ ஹுய் என்ற அந்த ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போனார்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த சிறுமி, சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுட்டுள்ளார்.
போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஜோகூர்பாருவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள அந்த சிறுமி, கடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.