நீர் விநியோக தடை; AIR SELANGOR மீது நடவடிக்கையை எடுக்க ஃபோம்கா (FOMCA) கோரிக்கை விடுத்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24-

சிலாங்கூரில் இரு ஆறுகளில் ஏற்பட்டுள்ள நீர் தூய்மைக்கேடு காரணமாக, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை ஏற்பட்டதற்காக, AIR SELANGOR நிறுவனத்தின் மீது தேசிய நீர் சேவை ஆணையம் – SPAN, கடும் நடவடிக்கையை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

AIR SELANGOR நிறுவனம் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால்தான், நீர் விநியோக விவகாரத்தில், அந்நிறுவனம் அலட்சியமாகவும் விரைந்து செயல்படாமலும் உள்ளதாக, மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் – ஃபோம்கா-வின் தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடசன் தெரிவித்தார்.

நீர் விநியோக தடை கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்தாலும், மருத்துவமனைகள், பள்ளிகள் முதலானவற்றிக்கு நீர் விநியோகத்தை வழங்க, SPAN மாற்று திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை.

பள்ளிகளை நாம மூட முடியாது. அப்படியிருக்கையில், கடந்த கால தவறுகளிலிருந்து அவர்கள் ஏன் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என தெரியவில்லை.

நீர் தடை ஏற்படும் போதெல்லாம் கொள்கலன் லாரியில் நீரை அனுப்பும் முறையை சார்ந்திருப்பதைவிட, AIR SELANGOR நிறுவனம், அதன் ஆதாயத்திலிருந்து ஒரு பகுதியை மாற்று திட்டங்களை வகுப்பதில் செலவழிக்க வேண்டும்.

குறிப்பாக, ஆறுகள் மாசடையாமல் இருப்பதை கண்காணிக்க, நடப்பிலுள்ள உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

மேலும், நீர் தடை ஏற்படும் போது, கட்டண கழிவை வழங்குவதை விட, பிரிட்டனில் அமலில் உள்ளது போல, பயனீட்டாளர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் முறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டுமெனவும் மாரிமுத்துஆலோசனை விடுத்தார்.

WATCH OUR LATEST NEWS