அது சைபர் தாக்குதல் அல்ல, Gobind Singh Deo விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 24-

கடந்த வாரம் உலகளாவிய நிலையில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதற்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ விளக்கம் அளித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு ‘கிரவுட் ஸ்ரைக்’ Crowdstrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் அதன் மென்பொருள் முறையை மேம்படுத்துவதில் ஏற்பட்ட பலவீனங்கள் காரணமாக தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக அரசாங்கத்தின் 5 ஏஜென்சிகளும், தனியார் துறையில் ஒன்பது ஏஜென்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் இதனால் அந்த 14 ஏஜென்சிகளுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

அரசாங்க அளவில் போக்குவரத்து அமைச்சு, கல்வி அமைச்சு, புறநகர் வட்டார மேட்பாட்டு அமைச்சு, தேசிய சுகாதாரக் கழகம் மற்றும் கெடா மாநில ஜகாத் வாரியம் பாதிக்கப்பட்டன.

எனினும் தனியார் அளவில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பெயர்களின் குறிப்பிடப்படவில்லை என்றாலும் விமானச் சேவை, வங்கிச் சேவை மற்றும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கோபிந்த் சிங் விளக்கினார்.

மேலும் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு 2024 ஆம் ஆண்டு சைபர் பாதுகாப்பு சட்டம், 2010 ஆம் ஆண்டு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டத்திருத்தம் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது மற்றும் அவற்றை பலப்படுத்துவதற்கு புதிய சட்டத்திருத்த மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்யவிருப்பதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் Gobind Singh இதனை தெரிவித்தார்.

எனினும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு, சைபர் தாக்குதலினால் ஏற்படவில்லை என்றாலும் இது போன்ற சம்பவங்களை இலக்கவியல் அமைச்சு கடுமையாக கருதுவதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS