கோபித்து கொண்டு வெளியேறிய மனைவி; விரக்தியில் கணவன் விபரீத முடிவு? கோவையில் பரபரப்பு

கோவை, ஜூலை 25-

கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த சென்னப்ப செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஜெகன்ராஜ் (வயது 37). இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். தீவிர மது பழக்கத்திற்கு அடிமையான ஜெகன்ராஜ் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜெகன்ராஜின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஜெகன்ராஜ் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் இருந்து திடீரென கரும் புகை வெளி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் பார்த்த போது வீடு முழுவதும் நெருப்பு பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பை அனைத்தனர்.

அதன் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஜெகன்ராஜ் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஜெகன்ராஜ் மது போதையில் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தற்கொலை தானா அல்லது விபத்தா என போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS