கோலாலம்பூர், ஜூலை 25-
சீனப்பள்ளி ஒன்றின் வளர்ச்சித் திட்டத்திற்கு மதுபான நிறுவனம் ஒன்று நிதி வழங்கியதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் அந்தப் பள்ளிக்கு தாங்கள் நிதி வழங்கியதாக கூறப்படுதை முன்னணி மதுபான நிறுவனமான Tiger Beer இன்று மறுத்துள்ளது.
சிப்பாங்கில் உள்ள சீனப்பள்ளி ஒன்றின் வளர்ச்சித் திட்டத்திற்காக நிதி திரட்டு நோக்கில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை படைத்த இசைக்குழுவினருக்கும், கலைஞர்களுக்கும் மற்றும் இ.தர செலவினங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள ஏற்பாட்டாளருக்கு மட்டுமே அந்த நிதி ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், பள்ளியின் வளர்ச்சித் திட்டத்திற்கு நிதி வழங்கப்பட்டதாக கூறப்படுவதை தாங்கள் முற்றாக மறுப்பதாக Tiger Beer நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் வசதி குறைந்த சீனப்பள்ளிகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் சீனக் கல்வி அறக்கட்டளை கடந்த 30 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. சீனப்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தும் சமூக நோக்கம் அந்த நிதி திரட்டும் நிகழ்வில் உள்ளது.
இந்நிலையில் சீனப்பள்ளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் விருந்து நிகழ்வில் படைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்படக்கூடிய செலவினத்தை ஈடுகட்டும் வகையில் தாங்கள் நிதி உதவி அளித்து வருவதாகவும், அது சீனப்பள்ளியின் வளர்ச்சித் திட்டத்திற்கு உரிய நிதி அல்ல என்று அந்த முன்னணி பீர் நிறுவனம் விளக்கம் அளித்தது.
சீனப்பள்ளிக்கு மதுபானம் நிதி தந்ததாக குற்றஞ்சாட்டும் தரப்பினர் தாங்கள் வழங்கிய நிதியின் மாதிரி காசோலை, பள்ளிப் பெயரில் வழங்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா? என்று அந்த பீர் கம்பெனி வினவியுள்ளது.