அம்பாங், ஜூலை 29-
கடந்த சனிக்கிழமை அம்பாங், தாமன் லெம்பா மஜு- வில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் மாது ஒருவர் தீயில் கருகி கிடந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீசார் எட்டு பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாது உயிரிழந்த சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்டவர்களை போலீசார் விசாரணை செய்து இருப்பதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
புகையை நுகர்ந்தது, உடலில் ஏற்பட்ட தீக் காயங்களால் அந்த மாது மரணம் அடைந்ததாக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சவப்பரிசோதனையில் கண்டறிந்துள்ளது.
அந்த மாதுவுடன் தீக்காயங்களுக்கு ஆளான அவரின் காதலன் என்று நம்பப்படும் ஆடவர் அம்பாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்னமும் சுயநினைவின்றி இருந்து வருவதாக ஏசிபி முகமது அசாம் குறிப்பிட்டார்.