கேரளா, ஜூலை 30-
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி தவிப்பதாக, எக்ஸ் பக்கத்தில் ஏஎன்ஐ பதிவிட்டுள்ளது.
250 தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக கேரள முதல்வர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர்கள் மேற்பார்வையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழு அரசு இயந்திரமும் மீட்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்றும் கேரள முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
”வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.