ஷா ஆலம், ஜூலை 29-
இந்நாட்டில் மூன்றாம் தரப் பிரஜைகள், இரண்டாம் தரப் பிரஜைகள் என்று யாரும் இல்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அனைவரும் சமமே என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
.
அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதி செய்வதும் அந்த உரிமையை மீட்டுத் தருவதும் சிலாங்கூர் அரசின் நடப்பு தலைமைத்துவத்தின் கடமையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
உரிமைகளை உறுதி செய்வதில் சரும நிறம், அரசியல் சித்தாந்தம், சமய வேறுபாடு மற்றும் இதர வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படாது. இதுதான் சிலாங்கூர் மாநில அரசின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.
MYSEL ( மைசெல் பிரிவின்) ஏற்பாட்டில் இன்று ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அடையாள ஆவணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மாநில மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளையும் மாநில அரசின் திட்டங்களின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும் பெறுவதிலிருந்து விடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடந்த 2008ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செல் அமைப்பை மாநில அரசு நிறுவியதாக அவர் சொன்னார்.
அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் பல சிக்கலை எதிர் நோக்குவதற்கு குடும்பச் சிக்கல்கள், அறியாமை மற்றும் மலாய் மொழியில் திறன் பெற்றிராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளில் அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம் போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றில் சுமார் 2,000 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
இதன் மூலம் 2,000 பேர் அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கும் கல்வி, வேலை வாய்ப்பு, அரசாங்கச் சலுகைகளில் உரிய வாய்ப்புகளை பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர்.