கேரளா, ஜூலை 31-
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக நொடிப் பொழுதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

123 பேர் பலி – 90 பேரை காணவில்லை
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்திருப்பதாக கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக 98 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
அத்துடன் 90 பேரை தேடும் பணி நடைபெற்றுவருகிறது. 131 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2-3 மணியளவில் நிலச்சரிவு
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. நேற்று (ஜூலை 29) கனமழை கொட்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2-3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.