ஷா ஆலம், ஜூலை 31-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை நடைமுறையில் வழக்கமாக்கிக் கொள்வதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் தொழில்முனைவர்கள், மனித வளம், பருவநிலை மாற்றம் மற்றும் பயனீட்டாளர் துறைக்கு பொறுப்பேற்று இருப்பவருமான வீரப்பன், பிளாஸ்டிக் பைகள், Polisterin மற்றும் பானத்தை உறிஞ்சும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ போன்றவற்றுக்கு தடை விதிப்பதற்கு மாநில அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தனது ஆட்சிக்குழுவில் அங்கீகாரம் வழங்கியதாக குறிப்பிட்டார்.
அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் அத்தேதியில் இந்த தடை அமல்படுத்த தொடங்கிய நிலையில் சிரம்பானில் மட்டும் இது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நடைமுறைக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை இனியும் பயன்படுத்தக்கூடாது என்று வணிகர்களுக்கும், பயனீட்டாளர்களுக்கும் ஊராட்சி மன்றங்கள் முழு வீச்சில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன..
சுற்றுச்சூழழை பாதுகாக்கவும், மாசுபாட்டை தவிர்க்கவும் நெகிரி செம்பிலன் அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வீரப்பன் கேட்டுக்கொண்டார்.
வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அனைவரும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மீதான தடையை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த தடை முழுமையாக அமலுக்கு வந்தப்பின்னர் நடப்பு உத்தரவை மீறுகின்றவர்கள் பிடிபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீரப்பன் நினைவுறுத்தினார்.