ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 01-
இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று, அடுக்குமாடி வீட்டின் 8 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணியளவில் ஜோகூர்பாரு, தாமன் தயா-அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது.
அந்த குழந்தை, நெருங்கிய உறவினர்களான 56 மற்றும் 78 வயது தம்பதியரின் பாதுகாப்பில் விடப்பட்டு இருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தாயார், சம்பந்தப்பட்ட தம்பதியர் ஆகியோர் அந்த குழந்தையுடன் அந்த அடுக்குமாடி வீட்டின் 17 ஆவது மாடியில் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்று விட்டு, வீடு திரும்பினர். குழந்தையின் தாயார் சலவை கடைக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஜோகூர்பாரு செலாடன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்தார்.
குழந்தையை அந்த தம்பதியர் வரவேற்பு அறையில் தனியாக விட்டுவிட்டு, தொழுகைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த குழந்தை, கிரில் இல்லாத ஜன்னலில் எட்டிப்பார்க்கும் முயற்சியின் போது தவறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி ரவுப் செலமட் குறிப்பிட்டார்.