மதுரை திருநகரில் நடிகர் சூரி புதிதாக மற்றொரு ஹோட்டலை இன்று திறந்துள்ளார்
வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக வலம் வந்த சூரி, விஜய், அஜித், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சூரியின் நகைச்சுவை காட்சிகளுக்கென தனி ரசிக பட்டாளமே உருவானது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தனக்கு கொடுத்திருந்த கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தினார் சூரி. அவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து சூரி ஹீரோவாக களமிறங்கிய அடுத்த படம் கருடன். துரை செந்தில் குமார் இயக்கிய இந்த படம் சமீபத்தில் வெளியாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கருடன் படத்திலும் சூரியின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. இதை தொடர்ந்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பார் என்று கூறப்படுகிறது. சூரியும் சமீபத்தில் இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

சூரியின் நடிப்பில் விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த 3 படங்களுமே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. இதில் கொட்டுக்காளி படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
நடிகர் சூரி தற்போது ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அந்த வகையில் தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் என்ற ஹோட்டல் ஒன்றை தொடங்கினார். சைவ உணவுகள் மட்டுமே கிடைக்கும் இந்த ஹோட்டலில் குறைவான விலையில், தரமான உணவு கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூரி புதிதாக மற்றொரு ஹோட்டலை இன்று திறந்துள்ளார். மதுரை திருநகரில் அமைந்துள்ள இந்த ஹோட்டலை நடிகர் சூரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஏற்கனவே இருக்கும் ஹோட்டலை சூரியின் சகோதரர்கள் நிர்வகித்து வந்த நிலையில் இந்த புதிய ஹோட்டலையும் அவர்களே நிர்வகிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
