கோலாலம்பூர், ஆகஸ்ட் 2-
மிதமான பக்கவாதத்திற்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வரும் நாட்டின் மூத்த நகைச்சுவை கலைஞர் சத்தியா என்ற சத்தியா பெரியாசாமி, கடந்த 40 ஆண்டு காலமாக பிரிக்க முடியாத தனது கலைத்துறை வாழ்க்கையை தொடர்வதற்கு நேர்மறையான உறுதிபாட்டையும், உற்சாகத்தையும் கொண்டுள்ளார்..
1984 ஆம் ஆண்டு டிவி தீகாவில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற PIMAI PIMAI TANG TU- என்ற மலாய் நகைச்சுவை நாடகத் தொடரில் அறிமுகமாகி, மக்களை வெகுவாக கவர்ந்த சத்தியா, கடந்த மாதம் 16 ஆம் தேதி உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார்.
வீட்டில் மனைவியோடு காலை உணவு உட்கொண்டிருந்த போது அவர் திடீரென்று மிதமான பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளானார்.
சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வரும் 60 வயது சத்தியா, உடலில் இன்னமும் வலி இருந்தாலும் முன்பு போல் அதிக வலியில்லை என்று குறிப்பிட்டார்.
உடலில் தெம்பு இருக்கும் வரையில், முடிந்த வரை தொடர்ந்து பணியாற்றப் போவதாக
பெர்னாமாவின் டாரி போக்கெட் ஆர்டிஸ் கே போக்கெட் ஆர்டிஸ் 2.0 நிகழ்விற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் சத்தியா இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலைஞர் சத்தியா உட்பட 20 மூத்தக் கலைஞர்களுக்கு 5 ஆயிரம் வெள்ளி ரொக்க உதவித் தொகையும், ஊட்டசத்து மருந்துப் பொருட்களையும் தனியார் நிறுவனம் ஒன்று அன்பளிப்பபாக வழங்கியது. .