அந்த இரண்டு போலீஸ்காரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

காஜாங், ஆகஸ்ட் 02-

அந்நிய ஆடவர் ஒருவரை மடக்கி, பணம் கேட்டு மிரட்டியதாக இரு போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பிடிப்பட்ட இரண்டு போலீஸ்காரர்கள் இன்று காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

39 வயது கோபெரல் நிக் ரிட்சுவான் நிக் மேன் மற்றும் 27 வயது கான்ஸ்டபெல் முஹம்மது நஜ்மி முகமது கோத்ரி என்ற அந்த இரு போலீஸ்காரர்கள் மாஜிஸ்திரேட் நூருல் ஹஃப்ஸான் அப்துல் அஜீஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த இரண்டு போலீஸ்காரர்களும் கடந்த ஜுலை 28 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் காஜாங், பாலகோங், ஜாலான் டேமிங் சாரி – சாலையோரத்தில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த வை லின் ஃபியோ என்பவரிடம் 300 வெள்ளியை லஞ்சமாக பெறுவதற்காக அவரை மடக்கி மிரட்டி, அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டு விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 384 பிரிவின் கீழ் அந்த இரு போலீஸ்காரர்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் அவ்விருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை தலா 4 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதித்தார்.

WATCH OUR LATEST NEWS