பிணைப்பணம் கோரி ஆள் கடத்தல் / போலீசாரின் அதிடித் தாக்குதலில் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 02-

நான்கு நபர்களை சுட்டுக்கொன்றது மூலம் பிணைப் பணம் கோரி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கிரிமினல் கும்பல் ஒன்றை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு, ஜோகூர், ஸ்குடாய்- யில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 35, 39, 45 மற்றும் 51 வயதுடைய நான்கு கிரிமினல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கோலாலம்பூரில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ஷுஹைலி முகமட் ஜெயின் இவ்விவரத்தை வெளியிட்டார்.

இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் 25 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பெண் உட்பட நால்வர்,ஸ்குடாய் வட்டாரத்தில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜுலை 11 ஆம் தேதி காலை 11 மணியளவில் சைபர் ஜெயா அருகில் லெபுஹ்ரயா மஜு டோல் சாவடி பக்கத்தில் பிணைப்பணம் கோரி, சீன நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவரும், உள்ளூர் பெண்ணும் கடத்தப்பட்ட சம்பவத்தில் இந்த கும்பல் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்று ஷுஹைலி முகமட் ஜெயின் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட அவ்விருவரையும் அந்த கும்பல், நான்கு நாள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அந்த கடத்தல் கும்பல் கோரியதைப் போல கடத்தப்பட்ட சீனநாட்டுப் பிரஜையின் சகோதரன், கிரிப்டோ நாயண மதிப்பில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 127 அமெரிக்க டாலர் அல்லது 54 லட்சத்து 57 ஆயிரத்து 290 வெள்ளியை பிணைப் பணமாக ஒப்படைத்துள்ளார்.

அந்தப் பெரும் தொகையை பெற்றுக்கொண்ட அந்த கடத்தல் கும்பல், கடந்த ஜுலை 15 ஆம் தேதி மாலையில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சீனநாட்டுப் பிரஜையையும், உள்ளூர் பெண்ணையும் நெகிரி செம்பிலான், ஜாலான் பேடாஸ் – லிங்கி சாலையோரத்தில் இறக்கி விட்டுச் சென்றுள்ளது என்று ஷுஹைலி முகமட் ஜெயின் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த கடத்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல்படி நேற்று முன்னிரவு 11.25 மணியளவில் ஜாலான் ஸ்குடாய் – கெலாங் பதாஹ் சாலையில் Perodua Kelisah காரில் சென்ற சந்தேகத்திற்குரிய நபரின் காரை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 51 வயது நபரை போலீசார் சுட்டுக்கொண்டனர். அந்த நபரின் காரில் கைத்துப்பாக்கி ஒன்றை போலீசார் மீட்டனர்.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக பின்னிரவு 12.05 மணியளவில் ஸ்குடாய், தாமன் எமாஸ் ஸ்குடை- யில் நடத்தப்பட்ட சோனையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஷுஹைலி முகமட் ஜெயின் குறிப்பிட்டார்.

இந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டது மூலம் சீன நாட்டுப்பிரஜை உட்பட இருவர் பிணைப்பணம் கோரி நடத்தப்பட்ட நாடகம் ஒரு முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS