புத்ராஜெயா,ஆகஸ்ட் 06-
இவ்வாண்டு அக்டோபரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், மக்களின் வாழ்க்கை செலவினங்களைக் குறைப்பதில், அரசாங்கம் கவனத்தை செலுத்தும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மக்களின் சுமைகளை குறைக்க, பல்வேறு அமைச்சுகளை கடந்த அணுகுமுறைகளை கண்டறியும்படி, நிதியமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் நடப்பில் குறைவாக இருக்கின்ற போதிலும், மக்கள் வாழ்க்கை செலவின அதிகரிப்பால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆகையால், அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், அப்பிரச்சனையைக் களைவதில் முனைப்பு காட்டப்படும்.
அதே வேளையில், பொருள்களின் விலை அதிகரிப்பதற்கு காரணமாக விளங்கும் குறிப்பிட்ட தரப்பினரின் கொள்ளை இலாபத்தை ஈட்டு போக்கு, ஆதிக்கப்போக்கு முதலானவற்றை களைவதிலும் தமது தரப்பு உரிய கவனத்தைச் செலுத்தும் எனவும் இன்று நடைபெற்ற நிதியமைச்சின் பணியாளர்களுடனான மாதாந்திர சபைக்கூடலில் பிரதமர் பேசினார்.