ஜெரிக்,ஆகஸ்ட் 06-
பேரா, ஜெரிக்- கிற்கும், கிளந்தான், ஜெலி- க்கும் இடையில் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் 31.2 ஆவது கிலோமீட்டரில், தமது மனைவியை சாதுரியமாக காரில் அழைத்து வந்து, அவரை சரமாரியாக அடித்து, பாதாளத்தில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆடவருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டது.
ஒரு வர்த்தகரான 39 வயதுடைய நபரை வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திங்கட்கிழமை வரையில் தடுத்து வைப்பதற்கு ஜெரிக், நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் சவீந்தர் சிங் அனுமதி அளித்துள்ளார்.
தனது 32 வயது மனைவியை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
கடந்த ஜுலை 27 ஆம் தேதி தனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் அந்த நபர், கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையின் அடர்ந்த காட்டுப்பகுதி அருகில் காரை நிறுத்தியப் பின்னர் அவரை பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் பாதாளத்திலேயே கிடந்த அந்த மாது, பொது மக்களின் உதவியுடன் தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் தப்பியுள்ளார்.
பிடிபட்டுள்ள மாதுவின் கணவருக்கு எதிராக குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் போலீசார், விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.