கோம்பாக், ஆகஸ்ட் 06-
சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் 21 லோரி ஓட்டுநர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 276 வாகன ஓட்டுநர்களிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 21 ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. காரணம், இது போன்ற வாகன ஓட்டுநர்களினால் சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் ஏற்படலாம் என்று அமைச்சர் அச்சம் தெரிவித்தார். போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் வாகனத்தை செலுத்தும் அதன் ஓட்டுநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் ஜேபிஜே ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.