ரோம்பின், ஆகஸ்ட் 07-
வீட்டின் மீது டிரெய்லர் லாரி மோதி, இருவருக்கு மரணம் விளைவித்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் ரோம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
40 வயதுடைய முஹம்மது ஃபட்சில் ஜகாரியா என்ற அந்த டிரெய்லர் ஓட்டுநர் , போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் லாரியை செலுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மரணம் விளைவித்தது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அந்த லோரி ஓட்டநருக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் பகாங், பெக்கன், கம்போங் கெட்டபாங் ஹிலிர் அருகில் ஜாலான் பெக்கன் – ரோம்பின் சாலையின் 5 ஆவது கிலோ மீட்டரில் முஹம்மது ஃபட்சில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விபத்தில் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐவரில் இருவரான 32 வயது ஃபசிஹா நஸ்ருதீன் மற்றும் அவரின் 21 வயது தம்பி முகமது வால்டன் ஃபாரிஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.