ஆகஸ்ட் 08-
தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருகனின் அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா இன்று தொடங்கியுள்ளது. தஞ்சையில் உள்ள சுவாமிமலையில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமிமலை , திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை ஆன்மிகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில், வியாழக்கிழமை சுவாமிமலை முருகன் கோயிலில் இருந்து இந்தப் பயணம் தொடங்கியது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 204 பக்தர்கள் இந்தப் பயணத்தில் பங்கெடுக்கின்றனர்.

பக்தர்களுடன் திருக்கோயில் பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகளும் சேர்த்து மொத்தம் 236 பேர் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் 6 பேருந்துகளில் அறுபடை வீடுகளுக்கும் என்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோர் இந்தப் ஆன்மிகப் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். முன்னதாக, ஆன்மிக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு பயணத்தின்போது தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர்.

பேருந்து சுவாமிமலையில் இருந்து திருத்தணி செல்லும். இரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் காலையில் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்வார்கள். பிறகு, பேருந்து பழநி முருகன் கோயிலுக்குச் செல்லும். 9ஆம் தேதி காலை பழநியில் தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அங்கிருந்து புறப்பட்டு 10ஆம் தேதி காலை திருச்செந்தூர் சென்றடைவார்கள். அங்கு முருகனை தரிசனம் செய்துவிட்டு, மாலையில் மீண்டும் சுவாமிமலைக்குத் திரும்புவார்கள் என்று ஆன்மிக சுற்றுலா ஏற்படுகளைச் செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.