கோலாலம்பூர், ஆகஸ்ட் 08-
மருத்துவமனை பணியாளர் என்று கூறிக்கொண்டு கடந்த ஒரு வார காலமாக செர்டாங் மருத்துவமனையில் வேலை செய்து வந்ததாக கூறப்படும் 14 வயதுடைய நபரின் குட்டு, அம்பலமானதைத் தொடர்ந்து அது குறித்து சுகாதார அமைச்சு விசாரணையை தொடங்கியது.
பதின்ம வயதினரான அந்த நபர், ஒரு மருத்துவப் பணியாளரைப் போல எவ்வாறு அந்த மருத்துமனைக்குள் பிரவேசதித்தார், வேலை செய்து வந்துள்ளார் என்பது குறித்து சுகாதார அமைச்சு முழு வீச்சில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
இது குறித்து காஜாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த போலீஸ் புகாரை அடிப்படையாக கொண்டு போலீஸ் துறையும் தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் ஒவ்வொரு வார்ட்டிலும் நுழைவதற்கு அதன் பணியாளர்கள் பிரத்தியேக மின்னியல் அட்டையைப் பயன்படுத்தினால் மட்டுமே வார்டு கதவுகள் திறக்கும்.
ஆனால், அந்த 14 வயது நபர், எவ்வாறு ஒரு வார காலமாக அந்த மருத்துவமனையில் ஒரு பணியாளரைப் போல நாடகமாடி வந்தார் என்பது அதிகாரிகள் மட்டுமின்றி மருத்துமனையின் பணியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம், தற்போது விசாரணையில் இருப்பதால் அது குறித்து மேல் விபரங்கள் எதனையும் வெளியிட முடியாது என்று போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் இரு விசாரணைகள் நடைபெற்று வருகின்றறன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.