புத்ராஜெயா,ஆகஸ்ட் 08-
வங்காளதேசத்தில் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் அந்நாட்டிற்கான பயணத்தை ஒத்தி வைக்குமாறு மலேசியர்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக வங்காளதேசத்தின் நிலவரங்களை தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. .
வங்காளதேசத்தின் நிர்வாகம் வழக்கம் போல் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அங்கு புதிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதாக வெளிவந்த தகவல் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
வங்காளதேசத்தில் இருக்கும் மலேசியர்கள் தங்கள் விபரங்களை டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் கலவரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கும் படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.