பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-
போலீஸ் துறை, அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினரும் ஊடகவியலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று டிஏபி- யைச் சேர்ந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சயரெட்சன் ஜோஹன் கோரிக்கை விடுத்துள்ளார்..
செய்தி வெளியிட்டது தொடர்பில் அதற்கான ஆதாரங்களை வெளியிடும்படி குற்றவியல் சட்டங்களை பயன்படுத்தி, ஊடகவியலாளர்களை கட்டாயப்படுத்தவது மற்றும் அழுத்தம் கொடுப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று சயரெட்சன் ஜோஹன் வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர்கள் வெளியிடக்கூடிய செய்தியின் ஆதாரங்கள், இரகசியமானவையாகும். அதுவே ஊடக சுதந்திரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். தங்களுக்கு கிடைத்த அந்த ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அரச மலேசிய போலீஸ் படையில் முக்கிய உயர் பதவிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்ய புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் திட்டமிட்டுள்ளதாக மலேசியா கினி இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தது.
எனினும் அந்த செய்தியை வன்மையாக மறுத்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், அந்த செய்தி எவ்வாறு கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களை காட்டும்படி அந்த இணைய செய்தித் தளத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்து இருப்பது தொடர்பில் அந்த டிஏபி எம்.பி. எதிர்வினையாற்றினார்.