செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த 14 வயது யுவதி; இரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்

சிலாங்கூர்,ஆகஸ்ட் 09-

சிலாங்கூர், செர்டாங்-ங்கிலுள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்திருந்த 14 வயது யுவதி, விசாரணைக்காக இரண்டு நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

இன்று செபாங் மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த அவரை, நாளை வரையில் தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை, மஜிஸ்ட்ரெட் முஹம்மது புகாரி எம்டி ருஸ்லான் வழங்கினார்.

பொதுச்சேவை ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தது, மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்தது ஆகிய குற்றங்களுக்காக, செஷன்ஸ் 170, செஷன்ஸ் 448 முதலான குற்றவியல் சட்டங்களின் கீழ், அந்த யுவதியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்ததற்கான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை அல்லது அதிகபட்சமாக ஐந்தாயிரம் வெள்ளி அபராதம் அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம்.

அதேவேளையில், பொதுச்சேவை ஊழியர் போல் ஆள்மாறாட்டம் புரிந்ததற்காக, ஈராண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவையிரண்டுமே அவருக்கு விதிக்கப்படலாம்.

முன்னதாக, உள்நாட்டைச் சேர்ந்த அந்த யுவதி நேற்று காலை மணி 9 அளவில், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் கீழ்த்தளத்தில், கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சொந்தமான உடைகள், பெயர் அட்டை முதலானவை பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாக, செபாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் வான் கமருல் அஸ்ரன் வான் யூசோப் கூறியிருந்தார்.

தொடக்கக்கட்ட விசாரணையில், அந்த யுவதி, அம்மருத்துவமனையின் அறுவைசிகிச்சை அறையினுள் அத்துமீறி நுழைந்துள்ளதும், மருத்துவ அதிகாரியின் போர்வையில், அறுவைச்சிகிச்சைக்கு உதவ முட்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டிருந்ததாக வான் கமருல் குறிப்பிட்டிருந்தார்.

WATCH OUR LATEST NEWS