கெபாலா படாஸ் , ஆகஸ்ட் 09-
நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட எந்தவொரு சம்பவத்தையும் விசாரணை செய்வதற்கு போலீஸ் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
போலீசார் உட்பட அதிகாரிகள் மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கும் விவகாரத்தில் ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டுள்ள ரகசிய ஆதராங்களை அம்பலப்படுத்துமாறு அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கக்கூடாது என்று NUJM எனப்படும் தேசிய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஜெரம் எனப்படும் கெராக்கான் மீடியா மெர்டேக்கா ஆகிய இரு அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை தொடர்பில் கருத்து கேட்ட போது அமைச்சர் சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
போலீசார் மேற்கொள்ளும் குறிப்பிட்ட வழக்கு சம்பவங்களில் தாம் தலையிட விரும்பவில்லை என்றும் ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் கடமையாற்றுவதற்கு முழு அதிகாரம் உள்ளது. அதனை போலீஸ் படைத் தலைவர் தன் ஸ்ரீ ரசாருதீன் ஹுசேன் உறுதிப்படுத்துவார் என்று சைபுடின் குறிப்பிட்டார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் முக்கிய உயர் பதவிகளில் பெரிய அளவில் மாற்றம் நடைபெறவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள மலேசிய கினியின் மூன்று நிருபர்கள் தற்போது புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு இலக்காகியிருப்பது தொடர்பில் கருத்து கேட்ட போது சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடாத நிலையில் போலீஸ் படையில் உயர் அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதற்கான தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை மலேசிய கினி வெளியிடமறுத்து விட்டதைத் தொடர்ந்து அதன் மூன்று நிருபர்கள் தற்போது விசாரணை வளையத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளனர்.