பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 12-
ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இன்னும் ஓர் ஆண்டுகள் கூட நிறைவு பெறாத நிலையில், இம்மாத இறுதியில் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகேஆர் கட்சியில் செல்வாக்குமிக்க ஒருவர் கூறுகையில், அக்கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடைவுநிலைக் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருவதால், அவர் வேறோர் அமைச்சுக்கு மாற்றப்படலாம் அல்லது அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்படலாம் என்றார்.
அதேவேளையில், கடந்த டிசம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு முன்பு, விவாதிக்கப்பட்டது போல, நடப்பில் MENTERI BESAR-ராக இருக்கக்கூடிய ஒருவர், அமைச்சர் பொறுப்பை ஏற்பார் எனவும் கூறப்படுகின்றது.
அவ்விவகாரம் பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் எனவும் பிகேஆர்-ரை சேர்ந்த அந்நபர் கூறினார்.
இதனிடையே, அமைச்சரவையில் மாற்றம் நிகழவிருப்பதை உறுதிபடுத்திய டிஏபி கட்சியைச் சேர்ந்த ஒருவர், துணையமைச்சர் பொறுப்பை வகிக்கின்ற பலர், அமைச்சர்களாக நியமிக்கப்படக்கூடும் என்றார்.
பெருநிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், இம்மாதம் அதன் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் ஒருவர் கலந்துக்கொள்வதாக இருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவதால், அமைச்சரின் வருகை ரத்து செய்யபட்டிருப்பதாக, அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததை, அந்நபர் சுட்டிக்காட்டினார்.
ஆகக் கடைசியாக, கடந்தாண்டு டிசம்பரில், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 29-இலிருந்து 31-ஆக அதிகரிக்கப்பட்ட வேளை, டிஏபி -யைச் சேர்ந்த வி.சிவகுமார்-ரிடமிருந்து அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டது.
சில அமைச்சர்கள், துணையமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டன.