ஆகஸ்ட் 14-
செவ்வாய் கிரகத்தின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசா 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு “மார்ஸ் இன்சைட் லேண்டர்’’ என்னும் விண்கலத்தை அனுப்பியது. அதன் கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அந்த புதிய பகுப்பாய்வில் நீரின் இருப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
இன்சைட் லேண்டர் விண்கலத்தில் ஒரு நில அதிர்வு அளவீட்டு கருவி (seismometer) பொருத்தப்பட்டிருந்தது. அந்த கருவி கடந்த 4 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் நில அதிர்வுகளை பதிவு செய்தது. அதாவது நான்கு வருடங்களாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பின் ஆழத்தில் இருந்த நில அதிர்வுகளை இந்த கருவி பதிவு செய்துள்ளது.
அந்த நில அதிர்வுகளை பகுப்பாய்வு செய்த போது, அந்த கிரகம் எவ்வாறு நகர்கிறது என்பது தெரிந்தது, மேலும், திரவ வடிவிலான நீரின் “நில அதிர்வு சமிக்ஞைகளை” விஞ்ஞானிகள் கவனித்தனர்.
செவ்வாயின் துருவங்களில் உறைந்த நீர் மற்றும் வளிமண்டலத்தில் நீராவிக்கான சான்றுகள் இருப்பதாக ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்ட போதிலும், கிரகத்தில் திரவ வடிவிலான நீர் கண்டுப்பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்த கண்டுபிடிப்புகள் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு செயல்முறைகளுக்கான கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளன.