பாரிஸில் இருந்து வந்ததும் பயங்கரவாதி உடன் சந்திப்பு… சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் தங்கமகன் அர்ஷத் நதீம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம், ஐநாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. 

பாரிஸில் அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் அவருக்கு இந்த தங்கப்பதக்கம் கிடைத்தது. அதில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை வீழ்த்து தங்கத்தை தட்டிச் சென்றார் அர்ஷத் நதீம். அவர் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 92.97 மீட்டர் வீசினார். இதுவரை ஒலிம்பிக் வரலாற்றி இந்த அளவு தூரம் யாரும் ஈட்டி எறிதலில் வீசியதில்லை.

இத்தகைய மகத்தான சாதனையை படைத்த அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிஸில் இருந்து லாகூர் விமான நிலையம் வந்த அர்ஷத் நதீமுக்கு அரசு சார்பில் ராஜ மரியாதை அளித்து, அவரை ஊர்வலமாகவும் அழைத்து சென்றனர். அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் உயரிய விருதும் அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு, 153 மில்லியன் பணம் மற்றும் தங்க கிரீடம் ஆகியவையும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்வர் ஹோண்டா சிவிக் கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருக்கிறார். அதில் என்ன கூடுதல் சிறப்பு என்றால், அவர் ஒலிம்பிக்கில் வீசிய 92.97 என்கிற நம்பர் பிளேட் உடன் அந்த காரை நதீமுக்கு வழங்கி இருக்கிறார். இப்படி ஒருபுறம் பரிசு மழையில் நனையும் அர்ஷத் நதீம், மறுபுறம் சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார்.

அது என்னவென்றால் ஐநாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியுடன் அர்ஷத் நதீம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஹரிஷ் தார் என்பவர் அர்ஷத் நதீமை சந்தித்து பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ அவர் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பின்னர் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருவதோடு பேசுபொருளாகவும் மாறி உள்ளது.

WATCH OUR LATEST NEWS