கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர்கள் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 14 நள்ளிரவில் அங்கே உள்ளே புகுந்த கலவரக்காரர்கள் வன்முறையில் இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் போராட்டத்தின் போது, அடையாளம் தெரியாத கும்பல் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து போராட்ட மையத்தை அடித்து நொறுக்கினார்கள். வாகனங்கள் மற்றும் பொது மக்களின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இடமும் இந்த தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் கூறியுள்ளனர்.
ஆனால், இதை மறுக்கும் கொல்கத்தா காவல்துறை, குற்றம் நடந்த செமினார் அறை பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது. போலி செய்திகளை பரப்புவார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினித் குமார் பேசிய போது, ஊடகங்களில் செய்யப்பட்ட தவறான பிரசாரத்தின் காரணமாகவே இத்தகைய கலவரம் நடைபெற்றது என்று கூறினார். நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, இந்த மருத்துவமனையில் நடைபெற்ற வன்முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாக கூறினார்.
இந்த வன்முறையை நடத்தியவர்களை 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார் அபிஷேக்.
அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி வன்முறையில் ஈடுபட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டினார்.

இந்த வன்முறை குறித்து காவல்துறை கூறுவது என்ன?
இந்த வன்முறைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார், “இங்கு என்ன நடந்ததோ அதற்கு ஊடகத்தின் பொய்யான பிரசாரமே காரணம். இது மிகவும் தவறான பிரசாரம். இந்த விவகாரத்தில் காவல்துறை என்னதான் செய்யவில்லை. கொல்கத்தா காவல்துறையால் என்ன முடியுமோ அனைத்தும் செய்தோம். நாங்கள் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் வதந்திகள் பரவத் துவங்கிவிட்டன. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்,” என்று கூறினார்.
“நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் இந்த பொய்யான ஊடக பிரசாரத்தால் கொல்கத்தா காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்த வழக்கில் ஒரே ஒரு குற்றவாளி தான் உள்ளார் என்று காவல்துறை கூறவே இல்லை. நாங்கள் அறிவியல் ஆதாரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது கிடைக்க நேரம் ஆகும்,” என்றும் தெரிவித்தார் அவர்.
வெறும் வதந்திகளின் அடிப்படையில் ஒரு மருத்துவ மேற்படிப்பு மாணவரை எங்களால் கைது செய்ய முடியாது. அதற்கு என்னுடைய மனம் இடம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார் வினீத் குமார்.
இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்கள் அதிகம் அழுத்தம் தருகின்றன என்றும் கூறினார் அவர்.
நாங்கள் செய்தது அனைத்துமே சரிதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. பாராபட்சம் பார்க்காமல் அந்த விசாரணை நடத்தப்படும். நாங்கள் சி.பி.ஐ.க்கு முழுமையான ஆதரவை வழங்குவோம், என்று கூறினார் வினீத்.