யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா ரஷ்ய ராணுவம்? 5 கேள்விகளும் பதில்களும்

ரஷ்யாவில் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த தாக்குதலை ‘கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என்று குற்றம்சாட்டியுள்ளார். யுக்ரேன் படைகளை ரஷ்ய எல்லையில் இருந்து துரிதமாக விரட்டியடிக்க வேண்டும் என்று ரஷ்ய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் – ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நிலவி வருகிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்த யுக்ரேன் முடிவு செய்தது ஏன்?

யுக்ரேனின் எல்லைக் கடந்த இந்த நடவடிக்கை தொடர்பாக இதுபோன்ற 5 கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்குச் சொல்லவிருக்கிறோம்.

கர்ஸ்க் பகுதியில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 6 ஆம் தேதி, யுக்ரேன் எல்லையோரம் உள்ள ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் யுக்ரைன் இராணுவ வீரர்கள் திடீரென தாக்குதலை துவங்கினர். இந்த தாக்குதல் எவ்வளவு பெரிது என்பது குறித்த துல்லியமான தகவல்களை சேகரிப்பது கடினம்.

ஆரம்பத்தில், இந்த நடவடிக்கை விளாடிமிர் புதினின் அரசாங்கத்தை எதிர்க்கும் ரஷ்ய குழுக்களின் ஊடுருவலாக தோன்றியது. இந்த குழுக்கள் யுக்ரேன் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் எதிரிகளுடன் கடும் சண்டை நடந்ததாக ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் (MIlitary Bloggers) தெரிவித்தனர்.

ரஷ்யாவின் சில கிராமங்கள் யுக்ரேன் வசம் பிடிப்பட்டதை அடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது யுக்ரேன் படைகள் தான் என்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டது என அதிபர் புதினிடம் கர்ஸ்க் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எல்லையில் பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தின் வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவெடுத்ததாக தெரிகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத யுக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், ‘நாங்கள் ஆக்ரோஷமாக உள்ளோம். எதிரி வீரர்களை முடிந்தவரை காயப்படுத்த முயற்சிக்கிறோம். ரஷ்யாவால் தனது சொந்த எல்லையை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் ரஷ்யாவை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற விரும்புகிறோம்.’ என்றார்.

WATCH OUR LATEST NEWS