புதுடில்லி, ஆகஸ்ட் 15-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியாவிற்கான இரண்டு நாள் அதிகாரத்துவ வருகையின் போது, மலேசியாவிற்கு இந்தியத் தொழிலாளர்கள் தருவிப்பு தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் மனித கடத்தல் முதலிய பிரச்னைகள் அரசாங்கத்திற்கு முக்கிய கவலையாக இருந்து வருகிறது.
இதன் தொடர்பில் இந்தியத் தொழிலாளர்களை சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக தருவிப்பது தொடர்பில் பிரதமரின் இந்த வருகையின் போது முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட வர்த்தக தொழில்முனைவர்கள் என மிகப்பெரிய மலேசிய பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வரும் ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிக்கிறார்.
மலேசியாவின் பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வாருக்கு இது முதலாவது அதிகாரத்துவப் பயணமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மலேசியப்பிரதமர் ஒருவர் இந்தியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் இந்த வருகையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதேவேளையில் வர்த்தகம், முதலீடு, இரு வழி உறவு தொடர்பில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கு இடையிலான மேலும் பல ஒப்பந்தங்கள் இரு நாட்டுப் பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்படவிருக்கின்றன.