அம்னோ கட்சியை மகாதீர் தடை செய்ய முயன்றதாக அம்னோ தலைவர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21-

அம்னோ கட்சியை மகாதீர் தடை செய்ய முயன்றதாக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறிய குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மறுத்துள்ளார்.
ஜாஹிட்டின் அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் அப்போது அம்னோவைத் தடை செய்ய மகாதீர் எண்ணியிருந்தால், உள்துறை அமைச்சருக்கு அவர் அறிவுறுத்தியிருப்பார் என்றும் மகாதீரின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஆனால் அவர் பிரதமராக இருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அம்னோ தொடர்ந்து நீடித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்னோ இனி மலாய்க்காரர்களுக்காகவும் அதன் கொள்கைகளுக்காகவும் நிற்காது என்றும், அதன் தலைவர்கள் ஊழலுடன் தொடர்புடையவர்கள் என்பதால் கட்சியைக் கலைக்குமாறு ஜாஹிட்டிடம் மகாதீர் கூறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்னோவைக் கலைக்கும் முடிவு ஜாஹிட் மற்றும் கட்சியின் தலைமையைச் சேர்ந்தது என்றும், கட்சி அதன் பாதையில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி அம்னோ என்று அழைக்கப்படுவதற்கு தகுதியில்லை என்றும் அது கூறியது.


ஜாஹிட் மீது நீதிமன்றத்தில் 47 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனாலும் அக்கட்சி தடை செய்யப்படவில்லை என்பதற்கு தற்போதும் அக்கட்சி இருப்பதே சான்றாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, அம்னோவின் பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க அப்போதைய உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் தயாராக இருப்பதாக தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனக்குத் தெரிவித்ததாக ஜாஹிட் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

WATCH OUR LATEST NEWS