கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் விவகாரம், மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான இருவழி உறவுகளில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எந்தவொரு பிரச்னையோ அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வரை சர்ச்சைக்குரிய அந்த சமயப் போதகரை நாடு கடத்தும் விவகாரத்தை அப்படியே கிடப்பில் விட்டு விடுவதுதான் நல்லது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அடிக்கடி வெளிநாடுகளில் இருக்கும் ஜாகிர் நாயக், எப்போதாவது மலேசியாவிற்கு திரும்புகிறார். அவர் நாட்டில் ஒரு செயலற்ற நபரைப் போல காணப்படுகிறார். மலேசியா அல்லது இந்தியாவிற்கு எதிராக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அறிக்கையும் அவர் வெளியிடுவதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
இந்தியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், India Today Global- க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இதனை தெரிவித்தார். பிரதமரின் இந்த பிரத்தியேக நேர்காணால் You Tube அலைவரிசையில் இன்று ஒளியேறியது.
மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இந்தியாவினால் தேடப்படும் நபரான ஜாகிர் நாயக்- கினால் மலேசியா, இந்திய உறவில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
மலேசியாவில் வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றுள்ள ஜாகிர் நாயக் தொடர்பில் இந்தியாவில் பல்வேறு தரப்பினர் கொண்டுள்ள அச்சம் மற்றும் கவலைக்குரித்து தாம் நன்றி கூறுவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய தீவிரவாதத் தன்மையிலான உரைகளை நிகழ்த்தியது மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் ஜாகிர் நாயக் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவினால் தேடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்று கோரி, அதற்கான நிறைய ஆதாரங்களை இந்தியா முன்வைக்குமானால் அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகரை இந்தியாவிற்கு நாடு கடத்துவது குறித்து மலேசியா பரிசீலிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அதேவேளையில் ஜாகிர் நாயக், சர்சையை ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும் வரையில் அவர் நாடு கடத்தப்பட மாட்டார் என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.