கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
கோலாலம்பூர், செத்தாபக், ஜாலான் கெந்திங் கெலாங் – கெம் வார்டிபர்ன் சாலையில் தார் கல்லூரி அருகில் தமன் புங்கா ராயா – வில் நேற்று மாலையில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இதுவரையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வங்சா மஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
26 ஆண்களும், 26 பெண்களும் சம்பந்தப்பட்ட வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிலச்சரிவு நிகழ்ந்த மலைச்சாரலையொட்டி அந்த வீடுகள் இருப்பதால் ஆபத்தை தர வல்லதாக உள்ளது என்று அவர் விளக்கினார்.
இன்னும் சிலர், தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வீடுகளை காலி செய்து விட்டு தங்கள் உறவினர்கள் வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற பதவி ஒப்படைப்பு சடங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏசிபி முகமது லாசிம் இதனை தெரிவித்தார்.
நேற்று பிற்பகலில் பெய்த கனத்த மழையின் காரணமாக அப்பகுதியில் மாலை 5.43 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.