கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-
தேசிய முன்னணியின் பிரதான உறுப்புக்கட்சியான அம்னோவின் 2024 ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாடு, கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் இன்று காலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த மாநாட்டையொட்டி, அம்னோ டிவிஷன்களிடமிருந்து மொத்தம் 171 தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமான டிவிஷன்கள், அம்னோவின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழுமையாக பொது மன்னிப்பு வழங்கி, அவரை , சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்மானங்களை சமர்ப்பித்துள்ளன.
நஜீப்பை விடுவிக்கக்கோரி 72 டிவிஷன்கள் வலியுறுத்தியுள்ளன என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுக் தெரிவித்துள்ளார்.
எனவே அம்னோ மாநாட்டில் நஜீப்பை விடுவிப்பது தொடர்பில் பேராளர்கள் முதன்மை தீர்மானமாக விவாதிப்பார்கள் என்பதுடன் அத்தீர்மானம் தொடர்பான பேராளர்களின் வாதங்கள், பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த கவன ஈர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நஜீப், தற்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார். தங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் விடுவிக்கப்பட வேண்டும். அவருக்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதில் பேராளர்கள் உறுதியாக உள்ளனர் என்று டாக்டர் அசிரஃப் வாஜ்டி தெரிவித்தார்.