செபாங் , ஆகஸ்ட் 23-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் KLIA 2-வில் உள்ள வர்ததகத் தளத்தில் உடல் சுகாதார மற்றும் ஒப்பனைப்பொருட்கள் விற்பனை கடையில் மருந்துப் பொருட்களை திருடியதாக ஓர் இத்தாலியப் பிரஜை, சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
மொரிசியோ லோசி , என்ற 58 வயதுடைய அந்த நபர், மாஜிஸ்திரேட் புகாரி ருஸ்லான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, ஆங்கில மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும் மலேசிய சட்டத்திட்டங்கள் குறித்து தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அந்த இத்தாலியப் பிரஜை கூறியதைத் தொடர்ந்து அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மொரிசியோ லோசி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் KLIA, இரண்டாவது முனையத்தில் உடல் சுகாதாரம் மற்றும் ஒப்பனைப்பொருட்கள் விற்பனைக் கடையில் சுவாசக் கோளாற்றினால் ஏற்படும் சளியை முறிப்பதற்கு பயன்படுத்தப்படும் fluimucil effervescent tablet என்ற மருந்து மாத்திரைப் பாட்டிலை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.