புத்ராஜெயா,ஆகஸ்ட் 23-
பேரிக்காதான் நசியனால் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் எதிர்நோக்கி வரும் விசாரணையில் தாம் தலையிட்டதாக கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நடப்பு சட்டங்களுக்கு ஏற்ப இவ்விவகாரத்தை சட்டத்துறை அலுவலகத்திடமே தாம் விட்டு விட்டதாக பிரதமர் விளக்கினார்.
இது போன்ற விசாரணைகளில் தாம் என்றுமே தலையிட்டதில்லை என்றும், தலையிடப் போவதில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகளுடன் AMANAT நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராகுவதற்கு சத்தியப்பிரமாண பிரகடன் மூலம் தாம் போதுமான ஆதரவை கொண்டு இருந்ததாக கிளந்தான்,நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகைதீன் யாசின் உரையாற்றியிருந்தார்.
அந்த உரை, முன்னாள் மாமன்னரான பகாங் சுல்தானை தொடர்பு படுத்துவதாக உள்ளது என்று கூறி, சர்ச்சைக்கு இடமானது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து முகைதீனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தற்போது விசாரணை செய்து வருவது குறித்து கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.