குளுவாங் , ஆகஸ்ட் 28-
வீடமைப்பு கட்டுமானத்தளத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கும் பணியின் போது குண்டின் சிதறல்கள் தெறித்து கடும் காயங்களுக்கு ஆளான இரண்டு போலீஸ்காரர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஜோகூர், குளுவாங், தாமன் ஸ்ரீ லம்பக், ஜாலான் தபாஎன்ற இடத்தில் ஒரு வீடமைப்பு கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காயமுற்ற இரு போலீஸ்காரர்களும் குளுவாங், என்சே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவ்விரு போலீஸ்காரர்களும் வழக்கமான வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.
ஜோகூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 39 வயது கோப்ரல் அப்துல் ஹலீம் – என்பவருக்கு விலா எழும்பு முறிந்துள்ளது. 34 வயது கோபரல் முஹம்மது ஃபாரூகி ஷம்சரி என்பவருக்கு இடது புறத்தில் விழா எழும்பு முறிந்துள்ளதாக ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.