சுங்கைப்பட்டாணி ,ஆகஸ்ட் 28-
கெடா, சுங்கைப்பட்டாணி, / பீடோங், / பீடோங் ஜெயாவில் கார் கழுவும் பணியாளரான ஓர் இந்திய இளைஞரை வெட்டிக்கொன்றதாக மூன்று இந்திய இளைஞர்கள் சுங்கைப்பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த 27 வயது நவீன்குமார் உத்தரன், சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த 36 வயது மாதவன் உத்திரன் மற்றும் கோலகெட்டிலை சேர்ந்த 31 வயது புவனேஸ்வரன் ராஜு ஆகிய மூன்று இளைஞர்கள், இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் இரு நபர்களுடன் கூட்டாக சேர்ந்து கார் கழுவும் பணியாளரான 28 வயது நரேந்திரன் சுப்பிரமணிம் என்பவரை வெட்டிக்கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த மூவரும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் சுங்கைப்பட்டாணி, பீடோங், பீடோங் ஜெயாவில் உள்ள கார் கழுவும் மையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை அலோர்ஸ்டார் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் மூவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டவில்லை.
இதனிடையே இந்த மூன்று நபர்களும், மேலும் இரு நபர்களுடன் கூட்டாக சேர்ந்து ஒரு பாதுகாவலாரான 29 வயது டினேஸ் ஜீவகரன் என்பவரை பாராங்கினால் வெட்டி சரமாரியாக காயம் விளைவித்ததாக மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இக்குற்றத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பீடோங், Kampong Toh Pawang-கில் புரிந்ததாக நவீன்குமார் உத்தரன், மாதவன் உத்திரன் மற்றும் புவனேஸ்வரன் ராஜு ஆகியோர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றாவளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆ ண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றஞ்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.