கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் நடைப்பாதையில் திடீரென்று ஏற்பட்ட நில அமிழ்வில் பாதாள சாக்கடையில் சிக்கி, காணாமல் போன விஜயலெட்சுமியை தேடும் பணி, ஆறாவது நாளை எட்டிய நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் முழு வீச்சில் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தடயமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இன்று தெரிவித்தார்.
அதேவேளையில் அந்த இந்தியப் பிரஜையை தேடும் பணியை தொடர்வதா? அல்லது இல்லையா? என்பது குறித்து இதுரை அரசாங்கம் எந்தவொரு முடிவும் செய்யவில்லை என்று ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
விஜயலெட்சுமியை தேடும் மீட்பு நடவடிக்கைகளில் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து இன்று புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பொறுப்பேற்றுள்ள கூட்டரசு பிரதேச அமைச்சர் என்ற முறையில் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா விளக்கம் அளித்ததாக அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்த நிமிடம் வரையில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜயலெட்சுமி குறித்து இதுவரையில் எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில் அரசாங்கத்தின் அடுத்த உத்தரவு வரும் வரையில் மீட்பு நடவடிக்கை தொடரும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
இதனிடையே மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கும் மற்றொரு குழி உருவாகியிருப்பது பாதசாரிகள் மட்டுமன்றி அங்குள்ள வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆளை விழுங்கும் குழி குறித்து அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில்l- லிடம் கருத்து கேட்ட போது அது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.