கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக தேச நிந்தனை எனும் கொடுங்கோல் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பெர்சத்து கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். தேச நிந்தனை சட்டம் உண்மையிலேயே கொடுங்கோல் சட்டம் என்றால் முகைதீன் , நாட்டின் பிரதமராக இந்த 17 மாத காலக்கட்டத்தில் அந்த கொடுங்கோல் சட்டத்தை ஏன் அகற்றவில்லை என்று அம்னோ மத்திய செயலவை உறுப்பினரான புவாட் சர்காஷி கேள்வி எழுப்பினார்.
மற்றவர்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அது தேச நிந்தனை சட்டம். உங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அது கொடுங்கோல் சட்டமா? அம்னோவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான புவாட் சர்காஷி வினவினார்.
முகைதீன் யாசின், நாட்டின் பிரதமராக இருந்த 17 மாத காலக்கட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தை பயன்படுத்தவே இல்லை என்று கூறி, பெர்சத்து கட்சித் தலைவர்கள் நெஞ்சை நிமித்த வேண்டிய அவசியமில்லை என்று புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டார்.
முகைதீன் பிரதமராக இருந்த போது, அதிகாரத்தின் உச்சப்பீடத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின். ஒரே கட்சியை சேர்ந்த இருவரும் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த போது அவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த கொடுங்கோல் சட்டத்தை ஏன் அகற்றவில்லை என்பதே தமது கேள்வியாகும் என்று புவாட் சர்காஷி குறிப்பிட்டார்.