பாங்கி ,செப்டம்பர் 02-
பெரிக்காத்தான் நேஷனல் வசம் உள்ள கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு எதிர்கட்சி மாநிலங்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு SG4 ( எஸ்.ஜி. ஃபார் ) என்ற நிறுவனம் தொடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.
SG4 Group Sdn. Bhd. என்ற பெயரில் அந்த நிறுவனம், கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் ஆலோசகருமான துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தில் நான்கு மாநிலமும் தலா 25 விழுக்காடு பங்குரிமையை கொண்டுள்ளன. இந்த நிறுவனத்தின் செயல்பாடானது, நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது அல்ல. மாறாக, பிற மாநிலங்களைப் போல், நாட்டின் செல்வ செழிப்பை சமமான அளவில் பங்கீட்டுக்கொள்ளும் நிலை, இந்த நான்கு மாநிலங்களுக்கும் இல்லாததால், சொந்தமாக நிதி வளத்தை பெருக்கிக்கொள்வதற்கு SG4 Group Sdn. Bhd. நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தின் வாயிலாக கிடைக்கக்கூடிய வருமானத்தை நான்கு மாநிலங்களும் சம அளவில் பங்கீட்டுக்கொண்டு, அந்தந்த மாநிலத்தை பொருளாதார ரீதியாக சுயமாக உயர்த்திக்கொள்ளும் என்று காஜாங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் துன் மகாதீர் இதனை தெரிவித்தார்.
இந்த விளக்கமளிப்பு கூட்டத்தில் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்கும் கலந்து கொண்டார்.