ஜொகூர் , செப்டம்பர் 02-
இரண்டு வர்த்தகர்களை மிரட்டி 45 ஆயிரம் வெள்ளியை பறித்ததாக சந்தேகிகப்படும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் முத்துவேலு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு வர்த்தகர்களில் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த அதிகாரி உட்பட நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான மேலும் தகவல்களை தாங்கள் சேகரித்து வரும் அதேவேளையில், விசாரணை முடிவடைந்ததும், உரிய நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை, மாநில பிராசியூஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கமிஷனர் குமார் தெரிவித்தார்.
ஜோகூர், செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 28 க்கும் 44 க்கும் இடைப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களும், தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை முடிவடையும் வரையில் அந்த நால்வரும் பொறுப்பு சாராத பணியில் இருந்து வருவர் என்று கமிஷனர் குமார் மேலும் விளக்கினார்.