கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலில் உள்ள இந்த சிலையை மேலே எடுத்து வர எதிர்ப்பு ஏன்?

05செப்டம்பர் 2024

டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன.

புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிமானங்களில் பெரும்பாலானவை உடைந்து கடலின் கீழ் தளத்தில் உள்ளன.

பிரபலமான திரைப்படக் காட்சியின் மூலம் ரோஸ் – ஜாக் ஜோடி இந்த பிடிமானங்களை மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக்கி விட்டது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ரோபோ ஆய்வுகள், அந்த பிடிமானங்களை கப்பல் இழந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலடியில் கப்பல் கிடந்ததன் விளைவாக எப்படி அதன் பாகங்கள் சிதைந்து உருமாறி வருகின்றன என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.

1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் கன்னிப் பயணத்தை மேற்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.

“டைட்டானிக் கப்பலின் முன் பகுதி மிகவும் பிரபலமானது. பாப் கலாசாரத்தில் இந்த தருணங்கள் எல்லாம் இருக்கின்றன- கப்பல் சிதைவு பற்றி யோசிக்கும் போது அது தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது அது அதே நிலையில் இல்லை” என்கிறார், இந்த புதிய தேடல்களை நடத்திய ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனத்தின் இயக்குநர் தோமசினா ரே.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு சமயத்தில் 4.5 மீட்டர் நீளமான இந்த பிடிமானங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று ஆய்வுக்குழு கருதுகிறது.

2022-ம் ஆண்டு ஆழ்கடல் வரைபட நிறுவனமான மெகலன் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்தப் படங்களில் பிடிமானங்கள் கப்பலில் இருப்பது தெரிந்தது. எனினும் அப்போதே அவை சிதைய தொடங்கியிருந்தன.

“ஒரு கட்டத்தில் கம்பிகள் உதிர தொடங்கி கீழே விழுந்துவிட்டன.” என்கிறார் தோமசினா ரே.

ஆய்வில் கிடைத்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்கள்

ஆர்.எ. எஸ் டைட்டானிக் நிறுவனம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வை மேற்கொண்டது.

தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இரண்டு கருவிகள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களையும் 24 மணி நேர உயர்தர காட்சிகளையும் எடுத்தன. அவை 800 மீட்டர் இடைவெளியில் கிடக்கும் கப்பலின் முன் பகுதியையும் பின் பகுதியையும் அதை சுற்றியிருக்கும் பொருட்களையும் படம் பிடித்தன.

இந்த காட்சிகளை கவனமாக ஆராய்ந்து வரும் நிறுவனம் , கப்பல் சிதைந்த இடத்தின் துல்லிய தகவல்களை கொண்டு டிஜிட்டல் 3டி ஸ்கேனை உருவாக்கும். வரும் மாதங்களில் மேலும் பல புகைப்படங்கள் வெளிவரும்.

WATCH OUR LATEST NEWS