கோலாலம்பூர், செப்டம்பர் 04-
தலைமையாசிரியர் என்ற முறையில் தனது கணவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பள்ளித் தளவாடப்பொருட்கள் சம்பந்தப்பட்ட விநியோகக் குத்தகையை வழங்கி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக பள்ளி ஒன்றின் இந்தியப் பெண் தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான 40 வயது மதிக்கத்தக்க அந்த இந்திய மாது, நேற்று இரவு 7 மணிக்கு புத்ராஜெயாவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிதமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த பெண் தலைமையாசிரியரை விசாரணைக்கு ஏதுவாக வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் இர்சா சுலாகா ரோஹனுதீன் அனுமதி அளித்தார்.
பொதுச் சேவைத்துறையில் உயர் பதவி வகிப்பவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நலன் சார்ந்த எந்தவொரு நிறுவனத்திற்கும் குத்தகைகளை வழங்கக்கூடாது என்பது பொது நிபந்தனையாகும்.
சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் கடந்த 2021 க்கும் 2022 க்கும் இடைப்பட்ட காலத்தில் பள்ளியின் தளவாடப்பொருட்களை வாங்குவதற்கு தனது கணவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு அந்த குத்தகையை வழங்கி, தனது கணவரே பள்ளியின் பிரதான விநியோகிப்பாளராக திகழ்வதற்கு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு SPRM சட்டம் 23 ஆவது விதியின் கீழ் அந்த மாது தற்போது தடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருவதாக SPRM விசாரணைப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.