மலாக்கா,செப்டம்பர் 11-
மலாக்காவில் இன்று அதிகாலையில் வாகனமோட்டி ஒருவர் சில நொடிகள், கண் அயர்ந்து விட்டதால், அவர் செலுத்திய Perodua Myvi கார், மேம்பாலத்தின் சாலைத்தடுப்பை மோதி, 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தது. இதில் அந்த ஓட்டுநர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மலாக்கா, சையத் அப்துல் அஜீஸ் மேம்பாலத்தில் நிகழ்ந்தது. தனியொரு நபராக அக்காரை செலுத்திய அந்த ஆடவர், காருடன் மேம்பாலத்திலிருந்து விழுந்ததில் உடல் மற்றும் கால்களில் பலத்த காயங்களுக்கு ஆளானார்.
மலாக்கா, அலோர் கஜா, தாமன் பயா ரும்புட் இந்தா- வைச் சேர்ந்த அந்நபர். மாநகரிலிருந்து லிம்பொங்கன் – ஐ நோக்கி, சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று மலாக்கா தெங்க- மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.
மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.