கான்பூர்: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி கான்பூர் மைதானத்தில் நடக்கும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், சூழலை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருவதாக பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பங்கேற்பதற்காக வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கான்பூர் மைதானத்தில் செப்.27ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடருடன் ஹோம் சீசன் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக இன்றைய தினமே இந்திய அணி வீரர்கள் சென்னை வரவுள்ளனர். பயிற்சி முகாமிற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.
அதேபோல் வங்கதேசம் அணியை பொறுத்தவரை ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சிறந்த அணியுடன் இந்திய அணிக்கு எதிராக விளையாட தயாராகியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
அதேபோல் இந்திய அணியை சமாளிக்க ஷகிப் உள்ளிட்ட வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் தொடங்கிய வெற்றிப் பயணத்தை வங்கதேசம் அணி தொடர்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானம் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் உள்நாட்டு அரசியல் பிரச்சனைக் காரணமாக ஆங்காங்கே கலவரம் நடந்து வருகின்றன.